கொழும்பு: இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதையும் தனது அரசாங்கம் செய்யாது என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதியான பின்னர், வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் அளித்த முதல் பேட்டியில், “இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எதையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை. மேலும் சீனாவுடனான எங்கள் ஈடுபாடு முற்றிலும் வணிகரீதியானது”, என்று அவர் இந்திய வலைத்தளமான பாரத் சக்தியிடம் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபயா நவம்பர் 29 ஆம் தேதி புதுடெல்லிக்குச் செல்லவுள்ளார். கோத்தபய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற சில மணிநேரங்களில், பிரதமரின் அழைப்பை ஒப்படைப்பதற்காக, அவரை கொழும்பில் சந்தித்த முதல் மூத்த வெளியுறவு அதிகாரி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆவார்.
தனது “நடுநிலை” வெளியுறவுக் கொள்கை பார்வையை மீண்டும் வலியுறுத்திய கோத்தபய, “வல்லரசுகளின் அதிகாரப் போராட்டங்களுக்கு இடையில் நாங்கள் செல்ல விரும்பவில்லை“, என்றார்.
மேலும், தெற்கு ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவுடனான தனது முன்னோடி அரசாங்கத்தின் உடன்பாடு குறித்து கருத்து தெரிவித்த கோத்தபய, “சிறிசேனா-விக்ரமசிங்க நிர்வாகம் அதை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு கொடுத்தது தவறு. இதனை சொல்ல நான் பயப்படவில்லை“, என்றார்.