பெலிசிஸ்:
பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி உள்ள சுவாமி நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், மத்திய அமெரிக்கா வின் பெலிஸ் நாட்டில் தஞ்சம் வேண்டி, குடியுரிமைக்கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது ஆசிரம பெண் சீர்டர்களிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது, மதுரை ஆதீனம் விவகாரம் உள்பட பல்வேறு குற்றச் சாட்டுக்களுக்கு ஆளாகி உள்ள நித்தியானந்தா, தற்போது, இரு குழந்தைகளை கடத்திச் சென்றதாக எழுந்த புகாரிலும் சிக்கி உள்ளார். அவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நித்தியானந்தா, தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ஏற்கனவே காலாவதியான நிலையில், அவர் வெளிநாடு தப்பிச்சென்றது எப்படி என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், இதுகுறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை , நித்யானந்தா இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்று வெளியுறவுத் துறை செயலர் ரவிஷ்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நித்யானந்தா, மத்திய அமெரிக்க நாடான பெலிஸின் குடியுரிமைக்கு அவர் விண்ணப்பித்து இருப்பதாக அந்நாடு தெரிவித்து உள்ளது.
நித்தியானந்தாவின், இந்திய பாஸ்போர்ட் 30/09/2018 அன்று காலாவதியானதால், இந்தியாவில் பாஸ்போர்ட் அதிகாரிகள் அதை புதுப்பிக்க மறுத்துவிட்டதாக இந்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அவர் நேபாளம் வழியாகவும், ஒரு வெனிசுலா பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் அவர் தப்பிச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நித்தியானந்தாவுக்கு, அவரது பக்தர் ஒருவர் வெனிசுலா பாஸ்போர்ட் பெற உதவி செய்ததாகவும், அதன்மூலம் அவர் வெளிநாடு தப்பி சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நித்தியானந்தா கடந்த 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பெலிஸில் குடியுரிமை கோருவதற்காக விண்ணப்பம் செய்திருந்ததாக வும், அதையடுத்து, பெலிஸ் அதிகாரிகள், இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு நித்யானந்தாவின் பாஸ்போர்ட் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு கடிதம் எழுதியதாக கர்நாடக காவல்துறையில் உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
2018ம் ஆண்டு நித்தியானந்தா பாஸ்போர்ட்டை புதுப்பிக்க ஏன் மறுக்கப்பட்டது, என்று கேட்டதற்கு, அவர் பல கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாலும், போலீசாரிடமிருந்து தேவையான அனுமதி பெறவில்லை என்று அவர்கள் பதிலளித்தனர். இந்தியாவில் நித்யானந்தா எதிர்கொள்ளும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்காததன் காரணங்கள் குறித்து ஏற்கனவே பெலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் பெலிஸ் நாடு அவருக்கு குடியுரிமை வழங்காது என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு (2018) மே மாதம் நித்தியானந்தாவுக்கு பெலிஸில் உள்ள ‘காமன்வெல்த் பல்கலைக்கழகம்’ கவுரவ முனைவர் பட்டத்தை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.