டெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தல், பாஜக பதவி ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட விவகாரத்தில், இன்று நடைபெற்ற பரபரப்பு விவாதங்களைத் தொடர்ந்து, நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மாநில கவர்னர் கோஷ்யாரி, பாஜகவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த நிகழ்வை எதிர்த்து, காங்கிரஸ், என்சிபி, சிவசேனா தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கில், நேற்று விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று காலையும் பரபரப்பு விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது, பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் அழைப்பு கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்தியஅரசு வழக்கறிஞர், முகுத் ரோத்தகி, பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்ததால் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப் பரிந்துரை செய்யப்பட்ட தாகவும், சுயேட்சைகளில் பலர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர், அதனால், அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அப்போதைய நிலையில், அஜித்பவார் தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் என கடிதம் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிவசேனா தரப்பில், அஜீத் பவார் அளித்த ஆதரவு கடிதத்தை அரையும், குறையுமாக நம்பி பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததன் வாயிலாக ஜனநாயக மோசடி நடைபெற்றுள்ளது என்று வாதிடப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ. பாஜகவிற்கு ஆதரவு வழங்குகிறேன் என கூறினால், அது கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று கேள்வி விடுத்தது.
தொடர்ந்து வாதாடிய பாஜக வழக்கறிஞர், தங்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த போதிய கால அவகாசம் தேவை என்றும், பாஜக இடைக்கால பேரவை தலைவரை நியமிக்க வேண்டும் மற்றும் எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன என்று கூறியது. மேலும்,உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டால் தேவையில்லாத குழப்பங்கள் உருவாகும் என்றும் வதாடியது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தனர்.