சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? என்று முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியம் சந்தேகம் எழுப்பி உள்ளார். தமிழகத்தில் சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவது கேள்விக்குறியே என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை முன்னாள் மேயரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணிமயம் கூறியதாவது,

தமிழகஅரசு  உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களை நடத்துமா என்பதில் சந்தேகம் உள்ளதாகவும், தேர்தல்களை நடத்துவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பது குறித்து, உச்சநீதி மன்றம் டிசம்பர் 13ந்தேதிக்குள் இறுதி செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதை சுட்டிக்காட்டியவர், ஆனால், தமிழகஅரசு  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போதுதான் தமிழகஅரசு புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது, அதன் எல்லைகள் இன்னும் வரையப்படவில்லை.  இந்த புதிய மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  சில நாட்களுக்கு முன்புதான் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல, நாகர்கோயில், ஓசூர் மற்றும் அவாடி ஆகிய மூன்று மாநகராட்சிகளை உருவாக்கும் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது, ஆனால் அரசாங்க உத்தரவு 10 நாட்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது. இந்த மாநகராட்சி பகுதிகளில், புதிய பகுதிகளைச் சேர்த்த பிறகு,  புதிய வார்டுகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால்,  வார்டுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். ஆனால், அவ்வாறு  அறிவிக்கப்படவில்லை.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை,   தலித் சமூகத்தினரும், தலித் அல்லாதவர்களும் மாறிமாறி இப்பதவியில் அமர்ந்துள்ளனர். ஆனால், நகர்ப்புற திருத்தச் சட்டம் 1974-க்குப் பிறகு, சென்னை மாநகராட்சி சுழற்சி முறையில் தனித்தொகுதியாக அறிவிக்கப்படவில்லை. முன்பு அமலில் இருந்த மாநகராட்சி சட்டத்தை பஞ்சாயத் ராஜ் சட்டத்துடன் இணைத்து இதனைக் கொண்டு வந்துள்ளனர். இத ந்நிலையில்தான், சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என விசிக வலியுறுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

சென்னை மேயர் தொகுதியை  தனித்தொகுதியாக அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் திமுகவுக்குப் பிரச்சினையில்லை. இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் முன்மாதிரியான அரசியல் இயக்கம் திமுக. சமூக விகிதாச்சாரம் அடிப்படையில் சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்தால் அதனை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், முதலில் அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா என்பதிலேயே சந்தேகம் நிலவுகிறது. ஆனால், திமுக எந்த நிலையிலும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

உதயநிதி  சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதில் தெரிவித்தவர்,  உதயநிதியை  நிறுத்த நிர்வாகிகள் சிலர் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். விருப்ப மனுக்களும் கொடுத்திருக்கின்றனர். தொண்டர்களின் விருப்பமும் அதுதான். உதயநிதி போன்ற வசீகரமானவர் நின்று ஓட்டு வாங்கிவிடுவார் என்ற காரணத்தால், மறைமுகத் தேர்தல் நடத்த அதிமுக முயற்சிக்கிறது” என்று மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.