டில்லி
கேரள அரசு சபரிமலைக் கோவிலுக்கு எனத் தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் எனக் கடந்த வருடம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதையொட்டி சபரிமலை பகுதியில் கடும் பதட்டமும் வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. இந்த தீர்ப்பை எதிர்த்து அளிக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த 5 நீதிபதிகளின் அமர்வு இந்த விசாரணையை 7 நீதிபதிகளின் அமர்வுக்கு மாற்றியது. அத்துடன் இளம்பெண்கள் செல்ல தடை இல்லை எனவும் தெரிவித்தது.
கேரள அரசு இளம்பெண்கள் சபரிமலைக்குச் செல்ல விரும்பினால் செல்லலாம் எனவும் ஆனால் அவர்களுக்குத் தனி பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தது. சென்ற வருடம் நடந்த நிகழ்வுகளையொட்டி தற்போது சபரிமலையில் பாதுகாப்பு கடுமையாக்கப் பட்டுள்ளது. சுமார் 23 ஆயிரம் காவலருடன் தேவசம் போர்டை சேர்ந்தவர்களும் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வரை 45 வயதுக்குக் குறைவான 315 பெண்கள் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதில் ஆந்திராவில் இருந்து 160 பேரும் தமிழகத்தில் இருந்து 139 பேரும் அடங்குவார்கள். இதைத் தவிரக் கர்நாடகா, தெலுங்கானா, ஒரிசா மாநிலங்களில் இருந்து பதிவு செய்துள்ளனர். ,ஆயினும் கேரளாவில் இருந்து ஒரு பெண் கூட பதிவு செய்யவில்லை.
உச்சநீதிமன்றத்தில் சபரிமலை கோவில் உரிமையாளர்களான பந்தளம் அரச குடும்பத்தினர் தங்கள் உரிமையைக் கோரி மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “கேரளாவில் உள்ள குருவாயூர் உள்ளிட்ட கோவில்களைப் போல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் தனிச் சட்டத்தைக் கேரள அரசு இயற்ற வேண்டும்.. இது குறித்து ஜனவரி 3-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை ஜனவரி மூன்றாம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.