கொல்கத்தா
இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் பந்தயத்தின் நான்கு நாட்களுக்கான டிக்கட்டுகள் விற்றுவிட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
தற்போது வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுடன் கொல்கத்தாவில் அவ்வணி வரும் 22 ஆம் தேதி முதல் டெஸ்ட் பந்தயத்தில் விளையாடுகிறது. இது பகல் இரவு போட்டியாக நடைபெறுகிறது. இது இந்தியா கலந்துக் கொள்ளும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி ஆகும்.
இந்த போட்டிக்கான பயிற்சிக்காக கொல்கத்தா நகரில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணியினர் ஏற்கனவே வந்துள்ளனர். இந்த போட்டி நடைபெற உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மைதானங்களில் ஒன்றாகும். இங்கு 67000 பேர் அமர முடியும்.
இந்த போட்டியின் சின்னமான “பிங்கு-டிங்கு” வை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், “இந்தியா விளையாட உள்ள முதல் பகல் இரவு போட்டிக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த போட்டிக்கான முதல் நான்கு நாள் டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன” எனத் தெரிவித்துள்ளார்.