டெல்லி:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் ஜேஎன்யு விவகாரங்களால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை மதியம்  2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், 2வது நாளான இன்றே களைக்கட்டத் தொடங்கி உள்ளது. மக்களவையில் இன்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற்றது தொடர்பாக காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் போர்க்கொடித் தூக்கிய நிலையில், மாநிலங்களவையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.

ஜேஎன்யு விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால் அதை சபாநாயகர்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில்,  அவை தொடங்கியதும்,  மாணவர்கள் விவகாரம் தொடர்பாக  சில உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.

அதேவேளையில், சில உறுப்பினர்கள் ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக பிரச்சினை எழுப்பினர். தொடர்ந்து இரு தரப்பினரும் முழக்கங்கள் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் வெங்கையாநாயுடு அறிவித்தார்.