சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம் வந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு மாதப் பிறப்பும் 4 அல்லது ஐந்து நாட்கள் மட்டும் திறப்பது வழக்கமாகும். மண்டல பூஜை சமயத்தில் மட்டும் கார்த்திகை 1 முதல் நடை திறக்கப்படும். அதன்பிறகு மீண்டும் மகரஜோதியை முன்னிட்டு நடை திறக்கப்படும். இந்த நேரத்தில் ஏராளமான பக்தர்கள் அங்கு வருவதால் அந்த நேரத்தில் சபரிமலை கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
வெகு நாட்களாக இந்த கோவிலில் இளம்பெண்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு இளம்பெண்கள் சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வரலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்தது. அதையடுத்து மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பருவத்தில் கடும் வன்முறைகள் நிகழ்ந்தன. ஆகவே பல பக்தர்கள் சபரிமலை செல்லவில்லை. இதனால் கடந்த ஆண்டு கோவில் வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் குறைந்ததால் தேவசம் போர்டு அதிர்ச்சி அடைந்தது.
தற்போது வன்முறைகளை தடுக்க அரசு கோவிலுக்கு வரும் இளம்பெண்களைத் தடுத்து நிறுத்தி விடுகிறது. ஆகவே அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. நடை திறந்த கார்த்திகை 1 ஆம் தேதி அதாவது 17 ஆம் தேதி அன்றே ஏராளமான பக்தர்கள் வந்தனர். அன்று கோவிலில் 3.32 கோடி வருமானம் வந்துள்ளது. சென்ற ஆண்டு இதே நாளில் ரூ.2.04 கோடி மட்டுமே வருமானம் வந்தது.
[youtube-feed feed=1]