டில்லி
தற்போது தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குத் தொகுதி வரையறை முடிந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டு களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் படவில்லை. இதையடுத்து, ‘தேர்தல் நடக்காததால் உள்ளாட்சி அமைப்புகள் முடக்கமடைந்துள்ளன. தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே உள்ளாட்சித் தேர் தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது எனவும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த ஜூலையில், அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘தமிழகத்தில் வார்டு மறுவரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட அக்டோபர் 31 வரை அவகாசம் தேவை’ என மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. ஆகவே அக்டோபர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டு, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் உள்ளாட்சித் தேர் தல் அறிவிப்பாணையை வெளியிட மேலும் 4 வாரம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் புதிதாக மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் , ‘அரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதில் இடர்பாடுகள் உள்ளன. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறியாளர்களைக் கொண்டு தொழில்நுட்ப ரீதியாகச் சோதனை நடத்த வேண் டும். எனவே, தேர்தல் அறிவிப்பாணை வெளியிட மேலும் 4 வாரம் அவகாசம் வேண்டும்’ எனக் கூறப் பட்டிருந்தது.
இதற்கு வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன் றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி நேரில் ஆஜராகியிருந்தார். தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா, ‘‘அரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையைக் குறித்த நேரத்துக்குள் வெளியிட முடியவில்லை.இப்போது அனைத்துப் பணி களையும் முடிந்து விட்டதால் டிசம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத் தில் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர், ‘‘ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு வேறு ஒரு அமர்வில் நிலுவையில் உள்ளது. அத்துடன் தமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப் பேட்டை, செங்கல்பட்டு என 5 மாவட் டங்கள் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளன. ஆகவே இந்த 5 மாவட் டங்களுடன் சேர்த்து ஏற்கெனவே இந்த மாவட்டங்கள் அங்கம் வகித்த திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் என மொத்தம் 9 மாவட்டங்களில் தொகுதி மறு வரையறைப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக சட்டப்பூர்வமாக முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த வழக்கோடு நாங்கள் தொடர்ந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்’’ என வாதிட்டனர்.
நீதிபதிகள், ‘‘இவ்வழக்கில் மாநில தேர்தல் ஆணை யம் விடுத்த கோரிக்கையை ஏற் கிறோம். ஆகவே மாநில தேர்தல் ஆணையம் வரும் டிச.13-ம் தேதிக் குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான அனைத்து பணிகளையும் சட்டப் பூர்வமாக முடித்து அறி விப்பாணையை வெளியிடும் என நம்பி எதிர்பார்க்கிறோம். ஆகவே இது தொடர்பான அறிக்கையை அன்றைய தினம் மாநில தேர்தல் ஆணை யம் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கெனவே நிலுவையில் உள்ள திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மற்றும் இந்த வழக்கு என அனைத்தையும் ஒன்றாக விசாரிக்கும் வகையில் உரிய அமர்வில் பட்டியலிடத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கிறோம்’’ எனக்கூறி, வழக்கு விசாரணையை வரும் டிச.13-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.