சென்னை: தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புறக்கணித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. அதில், தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த தேடுதல் குழு, அதற்கான பரிந்துரைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேர்வு குழுவிடம் வழங்கியது.
அதன்படி, அவர்களில் 3 பேரை இறுதி செய்யும் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சுய விவரக் குறிப்புகளை வழங்கவில்லை என கூறி எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தலைமை ஆணையராக இருந்த ஷீலா ப்ரியா, சில மாதங்களுக்கு முன்பாக வயது மூப்பு அடிப்படையில் பணியில் இருந்து விலகினார். அதனால் தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆகியோர் அடங்கிய தேடுதல் குழுவினர் ஏற்கனவே ஆலோசித்தது, குறிப்பிடத்தக்கது.