டெல்லி: மக்களவையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட சிவசேனா எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது அவையில் இருந்த சிவசேனா எம்பிக்கள், மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் விவசாயிகள் பிரச்னைகளை முன் வைத்து அவர்கள் கூச்சலிட்டனர். தமது இருக்கையில் இருந்து எழுந்த அவர்கள், விவசாயிகளுக்கு நீதி வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
சிவசேனா எம்பிக்களின் அமளியால் அவையில் சலசலப்பு நிலவியது. அவர்களுடன் தேசிய மாநாட்டு கட்சி எம்பிக்களும் கைகோர்த்தனர். ஜம்முகாஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து முழக்கம் எழுப்பிய அவர்கள், தங்கள் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதேநேரத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகிய எதிர்க்கட்சி எம்பிக்களும் அவையின் மையப்பகுதியில் திரண்டனர். நாட்டை பிளவுப்படுத்துவதை நிறுத்த வேண்டும், நீதி வேண்டும் என்று கூறி முழக்கமிட்டனர்.
அவையில் நிலவிய கூச்சல், குழப்பங்களுக்கு இடையே கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது பேசிய சிவசேனா எம்பி வினாயக் ராவுத், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநில விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒருகட்டத்தில் கோரிக்கைகளை வலியுத்திய சிவசேனா எம்பிக்கள் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மற்ற கட்சியினர் அமளியில் ஈடுபட, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுந்தார்.
கேள்வி நேரத்தை சுமூகமான முறையில் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அரசானது எந்த கேள்விக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறது என்றார். எம்பிக்களின் கோரிக்கைகளை ஏற்பதாகவும், உரிய நேரத்தில் பேச வாய்ப்பளிக்கப்படும் என்பதால் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவும் வேண்டுகோள் விடுத்தார்.