மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், கூட்டணி குறித்து பேச்சு நடத்தப்படுகிறதா ? என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டியின் போது கேள்வி எழுப்பியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தை சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக முன்வராததால், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை. இதையடுத்து, சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி விதித்த நிபந்தனையால், அந்தக் கட்சியின் சார்பில் மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சராக இருந்த அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்தார். இதனால் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையிலான விரிசல் அதிகமானது.
ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து, அதன்படி நடக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சரத் பவார் சந்திக்க உள்ளார். அப்போது சிவசேனாவுடன் கூட்டணியை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பங்கேற்க சரத் பவார் வருகை தந்தார். அப்போது அவரிடம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கப்போவதாகக் கூறி வருகிறது அது எவ்வாறு செல்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப, “அப்படியா, பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா ?” என்று சரத்பவார் பதில் அளித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்படியெனில் பேச்சுவார்த்தை நடத்தவில்லையா ? என மீண்டும் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம், “சிவசேனா – பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தார்கள், தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தோம். அவர்கள் அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்” என்று சரத் பவார் பதில் அளித்தார்.
சரத் பவாரின் இந்த பதில், மஹாராஷ்ரிடர அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சிவசேனா கட்சியினரிடையே புதிய குழப்பத்தையும் உண்டாக்கியுள்ளது.