டெல்லி: 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்கள் ஜனநாயக கட்சி எம்பிக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசு, சிறப்பு அந்தஸ்துக்கான 370வது சட்டப்பிரிவை நீக்கியது. நாடு முழுவதும் அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.
ஆனால், மத்திய அரசு உறுதியாக களத்தில் நின்று ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அதற்கான புதிய வரைபடத்தையும் வெளியிட்டது. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் ராஜ்ய சபா எம்பிக்கள் இருவர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். மிர் பயாஸ், நசீர் அகமது ஆகிய இருவரும் இந்த போராட்டத்தில் இறங்கினர்.
பதாகைகளை கைகளில் ஏந்திய இருவரும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஜம்முகாஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர வேண்டும். யூனியன் பிரதேங்களாக அறிவித்தது ஏற்கமுடியாது என்று கூறினர். எம்பிக்களின் இந்த போராட்டம் காரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.