ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை அரசியல் கைதிகளைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் 33 அரசியல் கைதிகள் வேறு இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
மக்கள் மாநாட்டுக் கட்சியின் சஜ்ஜத் லொன், தேசிய மாநாட்டுக் கட்சியின் அலி முகமது சாகர், மக்கள் ஜனநாயகக் கட்சியின் நயீம் அக்தர் உள்ளிட்ட பலர் ஸ்ரீநகர் தால் ஏரியை ஒட்டி அமைந்துள்ள செண்டார் தங்கும் விடுதியில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தியச் சுற்றுலா மேம்பாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விடுதி கிளை சிறையாக மாற்றப்பட்டிருந்தது.
இந்த கைதிகளை காவல்துறையினர் முரட்டுத்தனமாகத் தாக்கியதாகவும் தரக்குறைவாக நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா இந்த அரசியல் கைதிகளை உடைகளை அவிழ்த்து சோதனைகள் நடப்பதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.
தற்போது செண்டார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 33 அரசியல் கைதிகள் மௌலானா ஆசாத் சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தற்போது கடும் குளிர் நிலவுவதால் இந்த கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.