கரூர்: கரூர் அருகே பிரபல கொசுவலை நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வெண்ணைமலை என்ற பகுதியில் பிரபல கொசுவலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந் நிறுவனத்துக்கு தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மட்டுமல்லாது, வெளிமாநிலங்களிலும் கிளைகள் உள்ளன.


இந் நிலையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து, அவர்கள் தீவிர சோதனையில் இறங்கினர். கரூர் மட்டுமல்லாது கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள அந்நிறுவனத்துக்குட்பட்ட கிளைகளிலும் சோதனை நடைபெற்றது.


நிறுவனத்தின் உரிமையாளர் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 23 கோடி ரூபாய் பணம் சிக்கியது. சோதனை 3வது நாளாக நீடிக்கிறது. இது வரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.


ஆனால், சோதனையின் போது சிக்கியவை எவை என்பது பற்றி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சோதனையின் முடிவில், அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.