டெல்லி: சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான சஞ்சய் ராவுத் கூறி இருக்கிறார்.


மகாராஷ்டிர தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், அரியணை யாருக்கு என்ற விவகாரத்தில் மோதல் எழுந்து, அது கடைசியில் கூட்டணிக்கு வேட்டு வைத்தது.
இதுஒருபுறம் இருக்க, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதே சமயத்தில், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.


இறுதியில் சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி என்றும், கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவசேனா எம்பி, தங்களது கட்சியை சேர்ந்தவர் தான் முதலமைச்சர், அதில் சந்தேகமில்லை, சிவசேனா தலைமையில் தான் ஆட்சி என்றார்.
அதே நேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சிவசேனா எம்பிக்கள் சஞ்சய் ராவுத், அனில் தேசாய் இருவருக்கும் எதிர்க்கட்சி வரிசையில் தற்போது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி இவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வரிசையில் தான் அமர வேண்டும்.


இதுபற்றி பேசிய சஞ்சய் ராவுத், நாடாளுமன்றம் தொடங்கும் முன்பு டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் சிவசேனா பங்கேற்காது என்றார். ஆக மொத்தத்தில், மகாராஷ்டிராவில் பல காலம் பிணைக்கப்பட்டிருந்த பாஜக, சிவசேனா கூட்டணி அறவே அறுந்துபோய்விட்டது எனலாம்.