மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று சிவசேனா அதிரடியாக குற்றம்சாட்டி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதலமைச்சர் யாருக்கு என்ற விவகாரத்தால் கூட்டணி முறிந்தது.
மற்ற எந்த கூட்டணியும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாததால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், பாஜக, சிவசேனா இடையேயான விரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதற்கு ஒரு உதாரணம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசிய ஒரு விஷயம் தான். கிரிக்கெட்டும், அரசியலும் ஒன்று. எப்போது வேண்டுமானாலும் களத்தில் நிலைமைகள் மாறும் என்ற தொனியில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்து சிவசேனாவை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளது. அந்த கட்டுரையில் அமித் ஷாவையும் சிவசேனா விளாசி இருக்கிறது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: 145 என்ற பெரும்பான்மை எண்ணிக்கை உள்ளவர்களே ஆட்சிமைக்க முடியும். அரசியலமைப்பு சட்டத்தில் அதுதான் சரி. நாங்கள் (பாஜக) ஆட்சியில் அமர்வோம் என்று சொன்னவர்கள், ஆளுநரை சந்தித்து, எங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்று பேசுகின்றனர்.
இப்போது இல்லாத பெரும்பான்மை, தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் போது வந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது. அதே நேரத்தில் கட்கரியையும் சிவசேனா விட்டுவைக்கவில்லை. அவரையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறது.
கிரிக்கெட்டை போன்று அரசியலிலும் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிகழும் என்று கூறியிருக்கிறார். ஆனால், இப்போது கிரிக்கெட் விளையாட்டாக இல்லை, வணிகமாகி இருக்கிறது.
அதில் மேட்ச் பிக்சிங் இருப்பது போன்று, தற்போது மகாராஷ்டிர அரசியலிலும் மேட்ச் பிக்சிங்குக்கு தயாராகி வருகிறது. குதிரை பேரத்தை பயன்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்று சிவசேனா குற்றம்சாட்டி இருக்கிறது.