மும்பை
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளில் முதல்வர் பதவி குறித்து ஒரு முடிவு எட்டப்படாமல் உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயன்று வருகிறது. அதையொட்டி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி பாஜகவுடனான கூட்டணியை அக்கட்சி முறித்துக் கொண்டுள்ளது. நேற்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா கட்சித் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் அகமதுபடேல் மல்லிகார்ஜுன் கார்கே, மற்றும் கே சி வேணுகோபால் ஆகியோர் தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களையும் அதன் பிறகு சிவசேனா கட்சி தலைவர்களையும் சந்தித்துள்ளனர். குறைந்தபட்ச பொதுத் திட்டம் அமைப்பது குறித்து இந்த பேச்சு வார்த்தையின் போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த பேச்சு வார்த்தையில் முதல்வர் பதவி குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. முதல்வர் பதவி மூன்று கட்சிகளும் பகிருமா அல்லது ஒரு கட்சிக்கு அளிக்கப்படுமா என்பது குறித்தும் எதுவும் முடிவுக்கு வரவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
விரைவில் ஒரு குறைந்த பட்ச பொதுத் திட்டம் தயாரித்து அதை டில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். டில்லியில் இது குறித்து வரும் 17 ஆம் தேதி அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்க உள்ளார்.