டில்லி
சமூக வலைத் தளங்களை அதிகம் பயன்படுத்துவதால் இந்திய விமானப்படை விமானிகள் தங்கள் தூக்கத்தை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய விமானப்படையில் பணி புரியும் விமானிகளுக்கு மருத்துவ ஆலோசனை சுமார் 40 வருடம் முன்பு வரை நடைபெற்று வந்தது. ஆனால் அது சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு இப்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பல விமானிகள் தூக்கம் இன்றி அவதிப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்திய விமானப்படை தலைவர் ஆர் கே எஸ் பாதுரியா மிகவும் அக்கறை கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்திய விமானப்படை மருத்துவக் கழக 58 ஆம் ஆண்டு கூட்டத்தில் பேசும் போது பாதரியா, “நாம் இந்திய விமானப்படை மருத்துவக் கழகத்தின் சேவையை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தற்போது விமானிகளாக உள்ள இளைஞர்களுக்கு முன்பு அளித்ததைப் போல் மருத்துவ ஆலோசனை அவசியத் தேவையாக உள்ளன. எனவே அதை மீண்டும் துவக்க உள்ளேன்.
தற்போதுள்ள நிலையில் இளம் விமான ஓட்டிகள் சமூக வலைத் தளங்களால் மிகவும் கவரப்பட்டுள்ளனர். பலர் இதற்கு அடிமையைப் போல் உள்ளனர். இவ்வாறு அதிக நேரம் கண் விழித்து சமூக வலை தளங்களைப் பார்ப்பதால் இவர்களுக்குத் தூக்கம் கெடுகிறது. இப்போதைய விமானிகளின் பயணம் நீண்ட நேரம் கொண்டதாக உள்ளது.
அத்துடன் இவர்கள் நான்கைந்து முறை திரும்பத் திரும்ப விமானத்தைச் செலுத்த வேண்டி உள்ளது. எனவே சரியான தூக்கம் இன்மை என்பது இவர்களுக்கு அபாயமான விஷயமாகும்.. ஆகையால் இவர்களுக்குச் சரியான ஆலோசனை அளிப்பதன் மூலம் இந்த சமூக வலைத் தள உபயோகத்தை வெகுவாக குறைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.