உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரின் சஃபியின் விழிப்புணர்வு தகவல்!
மருத்துவமனையில் நடந்த நிகழ்வு !!!
என் வெளிநோயாளி பிரிவிற்கு 40 நாட்களே ஆன ஒரு குழந்தையை அதன் தாய் கொண்டு வருகிறார் ! சற்றே பதட்டமாக அவர் ,
சார் குழந்தை ராத்திரில இருந்து பால் குடிக்கல , சிறுநீர் கூட ஒழுங்கா போகல, அழுதுகொண்டே இருக்கு ,
சரி வேறென்ன செய்யுது மா !!
இருமல் , சளி இருக்கு ,
ஆமா, போன வாரம் வந்திருக்கீங்களே ,
ஆமா சார் , வந்தோம் , சளிக்கு மருந்து கொடுத்தீங்க , ஆனா குறையல ,!!!
எத்தனை நாள் மருந்து தர சொன்னேன் மா?
3 நாள் சார் , குறையல என்றால் என்ன செய்ய சொன்னேன் ,
2 நாளுக்குள் வர சொன்னீங்க !!
ஏன்மா வரல ? சரியாகிடும்னு நெனச்சோம் !!
குழந்தையை பரிசோதித்துவிட்டு, ஒரு மருந்து ஆவி ( Neb) பிடித்துவிட்டு எக்ஸ்ரேயுடன் வர சொன்னேன் !! பின்னர் பார்க்கையில் ,
ஆம் ….!! அதே தான் , நிமோனியா !!!
இது நிமோனியா மா என்றதும் , அந்த தாய் அழ ஆரம்பித்துவிட்டார் , நிமோனியா பற்றிய விபரம் சொல்லி, அது குணப்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதை விளக்கி கூறி , உள்ளே அனுமதி செய்து, தேவையான அவசர சிகிச்சை அளித்து முடித்து, தற்போது அறையில் இருக்கிறது குழந்தை!!
நிமோனியா பற்றி 10 கேள்வியும் அதற்கு பதிலுமாக இன்று அதை முழுமையாய் அறியலாம்,
1. நிமோனியா என்பது என்ன ?
நம் நுரையீரலின் உள்ளே உள்ள காற்றுப்பைகளின் சிலவற்றில் ஏற்படும் தொற்று தான் நிமோனியா !!
2. அதென்ன சார் காற்று பை ??
ஆம், நம்முடைய மூக்கு துவாரம் , பின்னர் சுவாச குழாய், பின்னர் இரு நுரையீரலலை பிரிக்கும் பிரிகுழாய் , அதன் கீழ் சிறு சுவாச குழாய்கள் கடைசியாக நுரையீரல் அறைகள், ஒவ்வொரு அறையிலும் உள்ள காற்று பைகள் ,
இதன் வழியே தான் நாம் நுகரும் ஆக்சிஜன் உள்சென்று , காற்றுப்பைகளை நிரப்பி அங்கிருக்கும் கார்பண்டை ஆக்சைட் எனும் காற்றை அழைத்துக்கொண்டு வெளியே விடுகிறது ,
பிராண காற்று பரிமாறும் இடம் இது !!
ஒவ்வொரு பையும் கிட்டத்தட்ட நம்முடைய விரல் நுனி அளவு தான் இருக்கும் ,
இந்த இடத்தில் தொற்று என்றால், அதுலும் சளியும் ,சவ்வும் , சளமும் , சீழும் சேர்ந்த தொற்றானால் என்ன நடக்கும் சற்று யோசித்து பாருங்கள் !!
3. சாதாரண சளி , இருமலுக்கும் , நிமோனியாவிற்கும் என்ன சார் வித்தியாசம் ?
சளி என்பது எந்த ஒரு அசௌகரியமான வெளிப்புற வித்தியாசத்திற்கும் நமது உடல் காட்டும் ஓர் எதிர்வினை !
அது, குளிர் காற்று முதல் புகை ,தூசி ,மாசு வரை இருக்கலாம் , இது மூக்கு , மேல் சுவாச குழாய் களில் மட்டும் லேசான பாதிப்பு இருக்கும் ,
அது பின்னர் சுவாச குழாய் உட்பகுதியை பாதிக்கும்போதும் , வீக்கம் அளிக்கும் போதும் , இருமல் , தொண்டை வலி ,வயிறுவலி, உடல்வலி ,சுவாச முட்டல் என மாறும் ,
அதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினாலோ !!
அதை முறையாக மருத்துவம் செய்ய தவறினாலோ !! ,
வீக்கம் கொண்ட சுவாச குழாய் , மெல்லிதாய் அடைபட்டு உள்ளிருக்கும் சுவாச பையை தாக்கும் ,
கூடவே, வைரஸ் , பாக்டீரியா , பூஞ்சை, தொற்றுக்கள் சேர்ந்தால் அது சாதாரண சளியிலிருந்து மாறுபட்டு ப்ராங்கைடிஸ் , அடுத்த நிமோனியா என வளர ஆரம்பிக்கும் ,
4. என்ன அறிகுறிகள் வைத்து நிமோனியாவை அறியலாம் சார் ?
சாதாரண சளி, லேசான இருமல், மிதமான காய்ச்சல், மருத்துவ உதவி பெற்றதும் 2 அல்லது 3 ஆம் நாள் குறைந்து விடவேண்டும், இல்லை, காய்ச்சல் அதிகமாக, குரல் மாற, மூச்சு பிரச்சினைகள் துவங்க, தொண்டை வலி கூட, இருமல் அதிகப்பட, இருமினால் நெஞ்சில் வலி ஏற்பட விட்டால் அது நிமோனியாவை நோக்கிய பயணம் ,
அதே போல், குழந்தைகள், பால் அருந்த மறுப்பது, உறங்க சிரமப்படுவது, சுவாசம் எடுக்க அல்லது விட முக்குவது, மூச்சு எடுத்து விடுகையில் விலா எலும்புகள் தூக்கி போடுவது போன்ற செயல் ,
மூச்சு சத்தம் வெளியே கேட்க துவங்குவது ,
மேற்கூறிய அனைத்துமோ அல்லது ஏதேனும் ஒன்றிரண்டு விடயமோ தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நலம் !!
இந்த இடத்தில் முக்கியமாக மக்கள் செய்யும் தவறுகள் ..
விக்ஸ் போன்ற தைலங்கள் தடவுவது,
நீராவி பிடிப்பது ,
ஸ்டாக்கில் உள்ள பழைய மருந்துகளை தந்து பார்ப்பது ,
பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்த மருந்தை தருவது ,.
வாய் ஊதுவது,
மூக்கை உறிவது ,
மஞ்சள் ,மிளகாய் தருவது ,
வசம்பு ,
வெற்றிலை ,
உச்சி பொடி ,
என அனைத்து வேண்டாத வேலைகளை பார்ப்பது, பின்னர் முற்றிய நிலையில் மருத்துவரிடம் ஓடி வருவது , முக்கியமாக செய்த அட்ராசிட்டி அனைத்தையும் மறைப்பது !!!
இதுதான் , இன்றும் நிமோனியாவால் இறப்பு நடப்பதன் உண்மை நிலை !!
5. யாருக்கெல்லாம் சார் இந்த நோய் பாதிப்பு இருக்கும் ??
யாருக்கும் வரலாம்!! ஆனால், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் , 50 வயதை தாண்டிய முதியோருக்கும் வரும் நோய் தாக்கம் மோசமாக இருக்கும் !!
6. இதை தடுக்க என்ன சார் வழி ??
தாய்ப்பால் ,
தடுப்பூசி ,
சுற்றுச்சூழல் சுத்தம் ,
மாசற்ற சுகாதாரம் ,
பாதுகாப்பான குடிநீர் ,
புகையற்ற சுற்றம் ,
தூசற்ற படுக்கை அறை ,
ஒவ்வாமை இல்லா உணவு பழக்கம் ,
முறையான மருத்துவம்,
சரியான மருந்து அளவு ,
தக்க சமய மருத்துவ ஆலோசனை ,
மொத்தத்தில், அறிவு சார்ந்த சிந்தனையுடனான குழந்தை வளர்ப்பு ..
7. இதற்கான தடுப்பூசி பற்றி சொல்லுங்க சார் ?
45 நாள்,
75 நாள்,
105 நாள் ,
6 மாதம் ,
18 மாதம் ,
5 வயது ,
10 வயது ,
வருடா வருட ப்ளு தடுப்பூசி ,
இவ்வளவுதான் இந்த கொடூர நோயை காக்க போடப்படும் ஊசிகள் ,
8. விடுபட்ட ஊசிகள் போடலாமா சார் ?
நிச்சயமாக போட்டுக்கொள்ளலாம் !! உங்கள் குழந்தை மருத்துவரை அணுகுங்கள் , அவர் உதவுவார் !!
9. வயதானோருக்கான தடுப்பூசி சார் ?
அவர்களுக்கும் உண்டு , ஒரே ஒரு முறை தான் ,
அவர்கள் கொடிய நிமோனியா வகை நோய்களிலிருந்து விடுபடலாம் !!
10. இந்த ஊசிகளெல்லாம் இலவசமாக அரசு மருத்துவமனையில் கிடைக்கிறதா சார் ?
இல்லை , அனைத்து ஊசிகளும் அங்கே கிடைப்பதில்லை , சில விசேஷ ஊசிகள் தனியார் மருத்துவமனைகளை அணுகி போட்டுக்கொள்வது நலம் !
ரேஷனில் நம் அன்றாட தேவைகள் அனைத்துமே தரமாக கிடைத்திடுமா ..!!
நமக்கு தேவைப்படும் தரமான உணவு பொருட்களை எப்படி வெளியே வாங்குகிறோமோ அப்படிதான தடுப்பூசியும் !!
தரம் மட்டுமே நிரந்தரம் !!
இயலாதோருக்கு உதவிடவும் அவர்கள் குழந்தைக்கு உரிய நோய் காப்ப்பீட்டினை அளிக்கவும் தான் அரசு விலையில்லா ஊசிகளை போடுகிறது ,
வசதி படைத்தோரும் அதையே நாடிடுவது நிச்சயமாக தவறு ..!
விழிப்புணர்வு என்பது நமக்கு மட்டுமல்ல ,
இப்பூவுலகிற்கானது ,
ஆகவே , நீங்கள் அறிந்ததை மக்கள் தெரிந்திட அதிகமாக பகிருங்கள் ..!
Dr.Safi.
Pediatrician
Nagercoil ,
நமக்கு ஒவ்வொரு குழந்தையும் முக்கியம் !!
வாழ்க நிமோனியா இல்லாத நல்வாழ்வுடன் !!