கொல்கத்தா: புரட்டி போட்ட, புல்புல் புயலால் மேற்குவங்கத்தில் 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, வங்கக்கடலில் அதி தீவிர புயலாக உருவெடுத்த புல்புல் புயல், மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடந்தது. புயல் காற்றுடன், பலத்த மழையும் பெய்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


தெற்கு 24 பர்கனாஸ், கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம், அதனை சுற்றியுள்ள பகுதிதிகளில் மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியது. சூறை காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாயந்தன.
ஏராளமான செல்போன் டவர்கள், மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. மீட்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. 60,000 வீடுகள் இடிந்துள்ளன.


5 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 22 பேர் வரை புயலுக்கு பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முதற்கட்ட தகவல்களின் படி, 19,000 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படுகிறது.
வேளாண்மை, மின்சாரம், வனம் உள்ளிட்ட பல துறைகள், புயல் சேத அறிக்கையை வரும் அளிக்கின்றன.அதன்பிறகு இறுதியான சேதமதிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும்.