ராஞ்சி:

‘ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை ஐந்து கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடை பெற உள்ளது. இந்த நிலையில் பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் கொலை, கொள்ளை மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 30ந்தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

ஜார்கண்டில் பாஜக ஆட்சி  முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியலை கடந்த 10ந்தேதி வெளியிட்டது. இதில் இடம்பெற்றுள்ள ஏராளமான வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த இரண்டு மாற்று கட்சியைச் பானு பிரதாப் ஷாஹி, சஷி பூஷண் மேத்தா ஆகியோருக்கும்  தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

இதில்  பானு பிரதாப் ஷாஹி மீது,  ரூ. 130 கோடி மருந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, சஷி பூஷண் மேத்தா என்பவர்,  தனது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

ஊழல் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வழக்குகளை சந்தித்து வரும் இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஊழலற்ற அரசை ஏற்படுத்தப்போவதாக கூறி வரும் பாஜக அரசு, ஊழல் மற்றும் கொலை, கொள்ளை குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நீதிமன்ற ஆதாரங்களின்படி, 2008 மருந்து முறைகேட்டில் சிபிஐ மற்றும் இடி சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் பானு பிரதாப் ஷாஹியின் பெயர் உள்ளது, இவர் பாஜகவின் 52 வேட்பாளர்களின் முதல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜார்கன்டில் மது கோடா ஆட்சியின்போது, பானு பிரதாப் ஷாஹி ​​விதிகளை மீறி, தனியார் நிறுவனங்களிட மிருந்து ஏராளமான மருந்துகளை வாங்கினார். இதனால், கடந்த  2011ம் ஆண்டு  கைது செய்யப்பட்டு 2013ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவருக்கு டிக்கெட் வழங்கியது மாநில பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைமையின் இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பவந்த்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான அனந்த் பிரதாப் தேவ் பாஜகவை விட்டு வெளியேறி அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கத்தில் (ஏ.ஜே.எஸ்.யூ) சேர்ந்தார்.

“ஒழுக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த கட்சி இப்போது களங்கப்பட்ட தலைவர்களுக்கு டிக்கெட் தருகிறது என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. மது கோடா அரசாங்கத்தின் போது ஊழல் பற்றி அனைவருக்கும் தெரியும். ஊழல் பிரச்சினையில் மட்டுமே மாநிலத்தில் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றது. பானு பிரதாப் ஷாஹி பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது, இந்த விஷயங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன, அனந்த் பிரதாப் தேவ்  கேள்வி எழுப்பி உள்ளார்.

தனது பள்ளியின் ஆசிரியரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மேத்தா, அக்டோபரில் பாஜகவில் சேர்ந்தார், அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.