மதுரை:
சமூக ஆர்வலர் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், அவருக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பங்கள் தொடர்பான ஆவனங்களை வெளியிட்ட நிலையில், திடீரென தலைமறைவானார். அவரை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. மேலும், அவர்மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டும் கூறியிருந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து, ஆந்திரா ரயில் நிலையத்தில் அவர், ஆந்திர காவல்துறையினருடன் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழக காவல்துறையினர் முகிலனை அங்குசென்று கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். அவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாலியல் வழக்கு தொடர்பான வழக்கில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, கடந்த பிப்ரவரி மாதம் 15 முதல் ஜூலை 6 வரை எங்கே தலைமறைவாக இருந்தீர்கள் என்பதை தெரிவித்தால் ஜாமீன் வழங்க பரிசீலிப்பதாக நீதிபதி கூறினார். அதைத் தொடர்ந்து, முகிலன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு 3 நாளுக்கு ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.