சென்னை:
தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க தமிழக அரசு முதல்கட்டமாக ரூ.600 கோடி விடுவித்து உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு மத்தியஅரசிடம் அனுமதி கோரியது. இதற்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள ஒவ்வொரு புதிய கல்லூரியும் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி 6 மாவட்டங்களில் 6 மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்த கல்லூரிகள் தொடங்க மத்திய அரசின் நிதியாக 1,170 கோடியை (தலா ரூ.195 கோடி) வழங்குகிறது. மீதமுள்ள ரூ.780 கோடியை (தலா ரூ.130 கோடி) தமிழக அரசு ஏற்கிறது.
‘ரூ.380 கோடியில் விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்திலும், ரூ.345 கோடியில் ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் கிராமத்திலும், ரூ.327 கோடியில் திண்டுக்கல் மாவட்டம் அதியநத்தம் கிராமத்திலும், ரூ.338.76 கோடியில் நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டி கிராமத்திலும், ரூ.336.96 கோடியில் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்திலும், ரூ.447.32 கோடியில் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த 6 புதிய கல்லூரிகளின் பணிகளை தொடங்க முதல்கட்டமாக தமிழக அரசு தனது பங்கில் இருந்து தலா ரூ.100 கோடி வீதம் மொத்தம் ரூ.600 கோடியை விடுவித்துள்ளது.
இதற்கான அரசாணையை சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று வெளியிட்டார்.