திருச்சி: வெங்காயம் மற்றும் தக்காளிக்குப் பிறகு, நுகர்வோரை மிகுந்த கவலைக்குள்ளாக்குவது இப்போது கத்தரிக்காயின் முறை. கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த பலத்த மழையால், மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர் சேதமடைந்துள்ளது. குறைந்த அளவிலான சப்ளை காரணமாகக் கத்தரிக்காயின் விலை விண்ணை எட்டியுள்ளது.
நம்புவதற்குக் கடினம்தான், இருந்தாலும் ஒரு கிலோ காயின் விலை ரூ.80 லிருந்து ரூ.100 வரை, காந்தி சந்தையில் விற்கப்படுகிறது. இதில் இன்னும் மோசமான செய்தி என்னவென்றால், இந்த நிலை இன்னும் சில வாரங்களுக்கு அப்படியே நீடிக்கும் என்பதுதான்.
உள்ளூர் விளைபொருள்கள் மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தால், ஆநதிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கலப்பின வகைகளை வாங்கும் சூழ்நிலைக்கு வணிகர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். காந்தி சந்தையில் கத்தரிக்காய் சப்ளை மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது.
“மணப்பாறை, மணிகண்டம், கல்லணை மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்தான் மாவட்டத்திற்கு முக்கிய சப்ளையர்கள். ஆனால், மழையால் பயிர் சேதமடைந்துள்ளதால், கத்தரிக்காயின் விலை ரூ30 லிருந்து ரூ, 80 வரை மொத்த விற்பனை சந்தையிலும், ரூ.100 வரை சில்லறை விற்பனைக் கடைகளிலும் விற்கப்படுகிறது.
பூர்வீக வகையைத் தவிர, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்டக் கலப்பின கத்தரிக்காய், சந்தையில் கிடைக்கிறது“, என்று திருச்சி காந்தி சந்தையின் மொத்த விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர், எம்.கே. கமலக்கண்ணன் தெரிவித்தார்.
வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பிற காய்கறிகளின் விலையும் லேசான உயர்வைக் காட்டியுள்ளது என்று அவர் கூறினார். அடுத்த பயிர் சுழற்சி தொடங்கும் போது நிலைமை மேம்படும் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர், விமலா கூறினார். மாவட்டம் முழுவதும் 235 ஹெக்டேரில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.