ஒகினாவா. ஜப்பான்
ஜப்பான் நாட்டின் ஒகினாவா நகர் அருகே நடுக்கடலில் இரண்டாம் உலகப்போரில் சுமார் 75 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் கிரேபேக் கிடைத்துள்ளது.
கடந்த 1944 ஆம் வருடம் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி 80 கடற்படை வீரர்களுடன் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தில் இருந்து கிரேபேக் நீர்மூழ்கிக் கப்பல் கிளம்பியது. இரண்டாம் உலகப்போர் நேரத்தில் இந்த கப்பல் சீனக் கடலில் 10 ஆம் கண்காணிப்புக் கப்பலாகக் கிளம்பியது. அதற்கு ஒரு மாதத்துக்குப் பிறகு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பான் நாட்டின் இரு கப்பல்களைத் தாக்கி வீழ்த்தி உள்ளது.
அப்போது கிரேபேக் நீர்மூழ்கிக் கப்பலில் இரு குண்டுகள் மட்டுமே இருந்ததால் திரும்பி வர அரசு உத்தரவிட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வர வேண்டிய நிலையில் திரும்பி வராமல் இருந்துள்ளது. அதன் பிறகு 1944 ஆம் வருடம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கிரேபேக் நீர்மூழ்கிக் கப்பலை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.
ஜப்பான் நாட்டுக் கடற்படை கிரேபேக் குறித்து அளித்த தகவல்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை கடந்த வருடம் ஜப்பான் நாட்டின் ஆராய்ச்சியாளர் யுடாகா இவாசாகி கண்டறிந்துள்ளார் அதன்படி கிரேபேக் கடைசியாக கிடைத்த இடம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதையும் சரியான இடம் குறித்தும் அவர் தகவல் அளித்தார். இந்த தகவலை ஒட்டி ஆழ்கடல் ஆய்வாளர் டிம் டைலர் தலைமையில் ஒரு குழு தேடுதல் வேட்டையில் இறங்கியது.
இந்த தேடுதலில் முதலில் கிரேபேக் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட இடத்தில் இருந்து 100 மைல் தூரத்தில் 1427 அடி ஆழத்தில் மூழ்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அமெரிக்கக் கடற்படை தலைவர் ராபர்ட் நேலந்து அறிவித்துள்ளார்.