மவுதாகா, உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கழிப்பறைக்குக் காவி நிறம் பூசப்பட்டதால் மக்கள் அதைக் கோவில் என நினைத்து ஒரு வருடமாக பிரார்த்தனை நடத்தி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மக்களுக்காகத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டன. அவற்றில் பல கழிப்பறைகளுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. குறிப்பாக அம்ரித்பூர் மாவட்டத்தில் உள்ள 350 கழிப்பறைகளில் 100 கழிப்பறைக்குக் காவி நிறம் பூசப்பட்டது. அம்மாநில முதல்வர் யோகிக்குப் பிடித்த நிறம் காவி என்பதால் காவி நிறம் பூசப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு காவி நிறம் பூசப்பட்ட கழிப்பறைகளில் மவுதாகா என்னும் ஊரில் அமைந்துள்ள கழிப்பறையும் ஒன்றாகும். அந்தக் கழிப்பறை இன்னும் திறக்கவில்லை. ஆனால் அதைக் கோவில் என நினைத்த மக்கள் கடந்த ஒரு வருடமாக அங்கு வந்து பிரார்த்தனை நடத்தி உள்ளனர். மூடப்பட்ட கதவினுள் ஒரு விக்கிரகம் உள்ளதாகவும் அவர்கள் நம்பி உள்ளனர்.
இது குறித்து அங்கு வசிக்கும் ராகேஷ் சந்தல், “இந்த கட்டிடம் சமூக சுகாதார மையம் உள்ள இடத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் காவி நிறம் பூசப்பட்டது மட்டுமின்றி கோவிலைப் போல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதைக் கோவில் என நினைத்துக் கொண்டிருந்தனர். சமீபத்தில் ஒரு அரசு அதிகாரி கூறிய பிறகு இது ஒரு கழிப்பறை என எங்களுக்குத் தெரிய வந்தது.” எனக் கூறி உள்ளார்.
காவி நிறம் காரணமாக இந்தக் குழப்பம் நேர்ந்துள்ளதால் மவுதாகா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வேறு நிறம் பூசத் தீர்மானிக்கப்பட்டு நிறம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது வேறு நிறம் மாற்றி பூசப்பட்ட பிறகும் இந்த கழிப்பறை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.