திருவனந்தபுரம்:

கேரளாவைச் சேர்ந்த இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி பெயின்டர் ஒருவர் கேரள அரசின் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பாக சிறு தொகையை மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் வழங்கினார்.

அப்போது, அந்த இளைஞர் தனது கால்களைக் கொண்டு முதல்வருடன், கைகுலுக்கிய புகைப்படமும், அவர் நிவாரண நிதிக்கான காசோலை வழங்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைக்காணும் வலைதளவாசிகள், இதுவல்லவோ மனித நேயம் என்றும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் திடுக்கிடும் உதாரணம் என புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை முதல்வர் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார்.  அத்துடன்,  இன்று காலை மிகவும் தொடுகின்ற அனுபவம் இருந்தது. அல்தூரைச் சேர்ந்த ஓவியரான பிரணவ், சிஎம்டிஆர்எஃப்-க்கு தனது பங்களிப்புகளை ஒப்படைக்க சட்டமன்ற அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் அளித்த ஆதரவில் பிரணவ் மகிழ்ச்சி தெரிவித்தார் என்று பதிவிட்டு உள்ளார்.

ஆலத்தூரைச் சேர்ந்த பிரணவ் பாலசுப்பிரமண்யன்  என்ற மாற்றுத்திறனாளி கலைஞர், பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்தவர், தனது கால்களைக்கொண்டு ஓவியம் வரைந்து வருகிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கேரளாவில் வெள்ளத்திற்கு பிந்தைய மறுவாழ்வு மற்றும் புனரமைப்புக்கு ஆதரவாக தொடங்கப்பட்டுள்ள  நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினார்.

அப்போது, தனது கால்களைக்கொண்டு முதல்வருடன் கைகுலுக்கிய நிலையில், கால்களாலேயே நிவாரண நிதிக்கான காசோலையையும் வழங்கினார்.

ஒரு மாநில முதல்வரிடம் தனது கால்களைக்கொண்டு கை குலுக்கியதும், அதை சிரித்த முகத்துடன் முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பும், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெயின்டரான பிரணவ் ஏற்கனவே இதுபோல நிவாரண நிதிகளை வழங்கி உள்ளார். கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பேரழிவு  ஏற்பட்டபோதும், முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ .5 ஆயிரம் நன்கொடை அளிக்க பிரணவ் முன்வந்தார். ஆனால், அப்போது முதல்வரை சந்திக்க முடியாத நிலையில், 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஏ.கே.பாலனிடம் அந்த பணத்தை வழங்கினார்.

தற்போது முதல்வரை சந்தித்து தன்னால் முடிந்த அளவிலான நிதியை வழங்கி உள்ளார்.

கேரள மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 2.32 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சுமார் 7.94 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய 2015 ஆம் ஆண்டில் கேரள அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கையை இயற்றியது.

அதன்படி,  மாற்றுத்திறனாளிகளுக்கான துயர நிவாரண நிதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான சுவாலம்பன் – சுகாதார காப்பீட்டு திட்டம், ஊனமுற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமண உதவி மற்றும் மாற்றுத்திறனாளி பெற்றோரின் மகள்கள் போன்ற திட்டங்களையும் தொடங்கியுள்ளது.

மாநில அரசின் இந்த திட்டங்களுக்கும் ஆலத்தூர் பிரணவ் பாலசுப்பிரமண்யன்  நன்றி தெரிவித்தார்.

இந்த தகவலை திமுக எம்.பி. கனிமொழியும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.