டில்லி

டில்லியில் உள்ள புராணா கிலாவில் ஒன்றரை வருடத்துக்குள் மகாபாரத தொடர்பு குறித்த அகழாய்வு நடைபெற உள்ளது.

டில்லி நகரில் புராணா கிலா என அழைக்கப்படும் பழைய கோட்டை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.   இந்த இடத்தில் மகாபாரதத்தில் கூறப்படும் இந்திரபிரஸ்தம் நகர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.  பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் தலைநகராக இந்திரபிரஸ்தம் அமைந்திருந்ததாக மகாபாரதத்தில் காணப்படுகிறது.

இந்த பழைய கோட்டைக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்த இந்தியத் தொல்பொருள் துறை முடிவு செய்து ஆய்வை நடத்தியது.  இந்த ஆய்வு சென்ற ஆண்டு முடிவடைந்தது.   ஆய்வாளர் வசந்த் ஸ்வரன்கர் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் இந்த பகுதிக்கும் மகாபாரதத்துக்கு எவ்வித தொடர்பும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மூத்த தொல்லியல் நிபுணர் பி ஆர் சிங் தமது தலைமையில் இன்னும் ஒன்றரை மாதங்களுக்குள் இரண்டாம் ஆய்வு தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.  வழக்கமாக ஒரு ஆய்வு முடிந்த வெகு சில நாட்களில் மற்றொரு ஆய்வு நடப்பது கிடையாது.   அத்துடன் பி ஆர் சிங் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

இந்த ஆய்வு குறித்து மூத்த தொல்லியல் நிபுணர் ஒருவர், “வழக்கமாக முதலில் ஆய்வு செய்த அதே குழுவினர் அடுத்த ஆய்வையும் முழுமையாக முடிப்பார்கள்.  ஒரு அகழாய்வு முடியக் குறைந்தது 6 மாதங்கள் ஆகும்.  ஆனால் தற்போது பிஆர் சிங்  தலைமையில் இந்த ஆய்வு நடைபெற உள்ளது.  அதுவும் அவருடைய பணிக் காலம் முடிவடையும் வேளையில் ஆய்வு தொடங்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய அகழாய்வு குறித்து அந்த ஆய்வை நடத்திய வசந்த் ஸ்வரன்கர், “இந்த பகுதியில் நான் ஏற்கனவே இருமுறை அகழாய்வு நடத்தி உள்ளேன்.  அப்போது இந்த பகுதியில் மிகவும் பழமையான கலாச்சாரம் இருந்தது தெரிய வந்துள்ளது.   இந்த பகுதி கடந்த 2500 வருடங்களாக மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது.  அதாவது மௌரியர் காலமான கிமு 4-5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இங்கு மக்கள் வசித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சரித்திர நிபுணரான சுப்ரியா வர்மா, “சரித்திரம் அல்லது இலக்கியத்துடன் இதிகாசங்களை ஒப்பிடுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.   அகழாய்வில் இந்த பகுதியில் மனிதர்கள் வசித்ததைக் கண்டறிய முடியும்.   ஆனால் இது மகாபாரதத்தில் கூறப்படும்  இந்திரப்பிரஸ்த நகர் என்பதை உறுதியாகக் கூற முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.