சென்னை
கடத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட சிலைகள் சென்னை கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் போட்டு வைக்கப்பட்டுள்ளன.
தமிழக கோவில்களில் இருந்து பல சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு திருடப்பட்டுக் கடத்தப்பட்ட பல சிலைகளை சிலைகடத்தல் தடுப்பு காவல்துறை மீட்டுள்ளன. இந்த சிலைகள் கற்கள், மரம், உலோகங்களால் செய்யப்பட்டவை ஆகும். இவ்வாறு கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிலைகள் வழக்கு முடிந்த பிறகு அந்த சிலைகள் திருடப்பட்ட கோவில்களுக்கு மீண்டும் அளிக்கப்படும்.
கடந்த 2016 ஆம் வருடம் மட்டும் ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் என்னும் பழம்பொருள் விற்பனையாளரிடம் இருந்து 800 கற்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அதைப் போல் தீனதயாளன் கூட்டாளியான லட்சுமிநாராயணன் என்பவர் இல்லத்தில் மரத்தால் ஆன பல 800 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர் ஷா என்னும் தொழிலதிபரிடம் இருந்து 244 பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் பல சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் எங்கிருந்து திருடப்பட்டன என்பது தெரியாமல் உள்ளன. இது குறித்து சிலைதடுப்பு காவல்துறை அதிகாரி மாணிக்கவேல், “இந்த பொருட்கள் மற்றும் சிலைகளை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் இடமில்லை என மறுத்துள்ளனர்.
அதனால் அவற்றை நாங்கள் வாகன நிறுத்துமிடத்தில் திறந்த வெளியில் வைத்துள்ளோம். எனவே இந்து அறநிலையத் துறையினர் இந்த சிலைகளை வைக்க ஒரு இடம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். இதற்காக திருவொற்றியூர் மற்றும் திருவான்மியூர் ஆகிய இரு இடங்களிலும் இடத்தையும் கண்டறிந்தோம். ஆனால் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
பழம் பொருட்கள் ஆர்வலரான பேராசிரியை சாரதா சீனிவாசன், “இவ்வாறு திறந்த வெளியில் சிலைகளை வைக்கக் கூடாது. இதனால் சிலைகள் பாழாகும். பறவைகளின் எச்சத்தினால் பாழாகாதபடி பாதுகாக்க வேண்டும். குறிப்பாக வாகன நிறுத்துமிடத்தில் அதிக தூசு காணப்படும். இதனால் காற்று மாசு மூலம் சிலைகள் அரிக்கப்படும். அத்துடன் மழை நீரினால் மரப்பொருட்களும் கற்சிலைகளும் பாதிப்பு அடைய வாய்ப்புண்டு” எனத் தெரிவித்துள்ளார்
இது குறித்து ஆர்வலர் விஜயகுமார், “டில்லியில் உள்ள புரானா கிலாவில் தொல்பொருள் துறை இத்தகைய சிலைகளை அருங்காட்சியகம் அமைத்து அங்குக் காட்சிக்கு வைத்துப் பாதுகாத்து வருகின்றது. அதைப்போல் தமிழக அரசு கோவில்களால் கேட்கப்படாத சிலைகளை வைக்க ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். குறிப்பாக வெண்கலச் சிலைகளைப் பத்திரமாக வைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” எனக் கூறி உள்ளார்.