பெங்களூரு

பெங்களூரு சிடி ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டை ஒரு கட்டுமான தொழிலாளியின் மகள் தொடங்கி வைத்துள்ளார்.

பெங்களூரு சிடி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒரு நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.  நடைமேடை எண் 4 இல்  அமைக்கப்பட்டுள்ள  இந்த படிக்கட்டின் பயன்பாடு கடந்த 9 ஆம் தேதி அன்று அப்பகுதி மக்களவை உறுப்பினர் பி சி மோகனால் தொடங்கி வைக்கப்பட இருந்தது.   அன்று அயோத்தி வழக்குத் தீர்ப்பு அளிக்கப்பட்டதையொட்டி அவர் அவசரமாக டில்லி சென்று விட்டார்.

ஆயினும் கடந்த 9 ஆம் தேதி அந்த படிக்கட்டு தொடக்க விழா அவசியம் நடைபெற வேண்டும் என்பதில் மோகன் மிகவும் கண்டிப்பாக இருந்தார்  ஆகவே அவர் இது குறித்து விழா அமைப்பாளர்களிடம் தொடக்க விழாவைப் பொதுமக்களில் ஒருவரை வைத்து நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  எனவே ரெயில்வே அதிகாரிகள் அதற்காக ஒரு சிறுமியை தேர்வு செய்தனர்.

அந்தப் பகுதியில் கட்டுமான தொழிலாளியாகப் பணி புரியும் சாந்த்பீ என்பவரின் மகளான 10 வயது சிறுமி பேகும்மா தான் அந்தப் பெண் ஆவார்.  ரெயில் நிலையத்தில் 4 ஆம் எண் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள நகரும்படிக்காட்டு மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஏ சி காத்திருக்கும் அறை ஆகியவற்றை ரிப்பன் வெட்டி பேகும்மா திறந்து வைத்தார்.