துபாய்: உலக பாரா தடகளப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் தங்கம் வென்றுள்ளார். இவர் இதில் தங்கம் வெல்வது இது இரண்டாவது முறை.
மற்றொரு இந்திய வீரரான அஜித் சிங்கிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. துபாயில் மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்களுக்கான ‘எப்-46’ பிரிவு ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் சுந்தர் சிங் குஜ்ஜார், 61.22மீ எறிந்து, தங்கத்தை தட்டினார். இவர் கடந்த 2017ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். தற்போது துபாய் போட்டியிலும் தங்கம் வென்றதன் மூலமாக, உலக பாரா தடகளப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வெல்லும் இரண்டாவது வீரரானார்.
இதற்கு முன்னதாக, ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா இதே சாதனையை செய்திருந்தார். சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டியின் விதிப்படி, இறுதிப்போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள், ஜப்பானில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறுகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவின் சுந்தர் சிங், ஹெராத், அஜித் சிங் மற்றும் ரிங்கு ஆகியோர் பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளனர்.