கச்சிகுடா: ஹைதராபாத் அருகே, கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தால் பரபரப்பு நிலவியது.
கோவையில் இருந்து டெல்லிக்கு கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் ஹைதராபாத், கச்சிகுடா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது அதே நடைபாதையில் தண்டவாளத்தில் லிங்கம்பள்ளி-பலக்நுமா செல்லும் புறநகர் ரயிலும் வந்தது. இரு ரயில்களும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 12 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உஸ்மானியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த மூத்த ரயில்வே அதிகாரிகள், பி.பி. சிங், கூடுதல் பொது மேலாளர், ரயில்வே மேலாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மீட்பு ரயிலும் உடனடியாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து, தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: விபத்தில் புறநகர் ரயிலின் 6 பெட்டிகளும், கொங்கு ரயிலின் 3 பெட்டிகளும் தடம்புரண்டன.
12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கோளாறே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. ரயில் நிலையம் உள்ளே என்பதால் ரயில் குறைந்த வேகத்தில் வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்தையடுத்து, 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனிடையே, புறநகர் ரயிலின் ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் பணிக்காக, ரயில்வே அதிகாரிகள் குழுவுடன், தேசிய பேரிடர் மீட்புக்குழு வந்துள்ளது.