மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில், பாஜகவுடன் தனது உறவை சிவசேனா முறித்துக்கொண்ட நிலையில், சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுகிறது.

மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரேயும், துணைமுதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் பதவி ஏற்க உள்ளதாக மும்பையில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றனர். 

இந்த நிலையில், இன்று மாலை, ஆட்சி அமைக்க உரிமைக்கோரி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கவர்னரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுடகாலம் கடந்த 8ந்தேதியுடன் முடிவடைந்து உள்ளது. இதுவரை எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்காத நிலையில், அங்கு கவர்னரின் கட்டுப்பாட்டில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

மாநில சட்டமன்ற தேர்தலில்  பாஜக சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், சிவசேனாவின் இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்துவிட்ட நிலையில், பாஜகவுக்கு ஆதரவு தர சிவசேனா மறுத்து விட்டது. இதனால்  பாஜக ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானது. இந்த நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த மத்தியஅமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாஜக சிவசேனா இடையேயான உறவு முறிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், சிவசேனா தரப்பில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சந்தித்து ஆதரவு கோரப்பட்ட நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து வந்தன. தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டனா சூழ்நிலையில், இன்று காலை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும் சந்தித்து பேசினார். இதில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், சரத்பவார் மூலம் காங்கிரஸ் ஆதரவையும் சிவசேனா கூறி உள்ளது. இது தொடர்பாக இன்று மாலை காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டம் கூடி முடிவு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. சிவசேனா, என்சிபி கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில், சிவசேனா, என்சிபி இடையே குறைந்தபட்சம் செயல்திட்டம் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், அதில் குறிப்பிட்டுள்ள ஒப்பந்தம்படி, மாநிலத்தின் 5 ஆண்டுகாலம் முதல்வராக சிவசேனா தலைவர்  உத்தவ் தாக்கரேவும், துணைமுதல்வராக, என்சிபி கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இருப்பார் என்றும் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கூட்டணி அமைச்சரவை அமைப்பது குறித்து இரு தரப்பினரும் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள் என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு கடந்த  மாதம் 21ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவையான நிலையில், சிவசேனாவின் முதல்வர் பதவி கோரிக்கை காரணமாக சிவசேனா, பாஜக இடையே உறவு முறிந்து உள்ளது.

தற்போது,  56 இடங்களை மட்டுமை கைவசம் வைத்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்  கட்சிகள் பெற்றுள்ள தொகுதிகள் விவரம்

பாரதிய ஜனதா கட்சி – 105 இடங்கள்

சிவசேனா – 56 இடங்கள்

காங்கிரஸ் கட்சி 44 இடங்கள்

தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்கள்

பகுஜன் விகாஸ் ஆகாதி கட்சி 3 இடங்கள்

அகில இந்திய முஸ்லிம் கட்சி – 2 இடங்கள்

பிரகார் ஜன்சக்தி கட்சி – 2 இடங்கள்

சமாஜ்வாதி கட்சி – 2 இடங்கள்

சுயேச்சைகள் – 13

ஆட்சி அமைக்க தேவையான இடங்கள்: 146