சென்னை

ந்திய நாட்டின் அரசியலமைப்பை அசைத்துப் பார்க்கும் ஒரே நாடு ஒரே நிர்வாகம் என்னும் கட்டுப்பாட்டை திமுக அனுமதிக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது.   இந்த கூட்டம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலும் பொருளாளர் துரைமுருகன் முன்னிலையிலும் நடந்தது.  இந்த கூட்டத்தில் டி ஆர் பாலு, ஐ பெரியசாமி, சுப்புலட்சுமி ஜகதீசன், தயாநிதி மாறன், கனிமொழி, ஆ ராசா,  ஜெ அன்பழகன்,  மா சுப்ர்மணியன் உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர்.  கூட்டத்தில் சுமார் 4 ஆயிர்ம பேர் கலந்துக் கொண்டனர்.

இந்த மாநாட்டில் கொண்டு வரப்பட்ட சிறப்புத் தீர்மானம் குறித்து மு க ஸ்டாலின், “அரசியலமைப்புச்  சட்டம்  1949ம் ஆண்டு  நவம்பர்  26ம்  நாள்  அரசியல்  நிர்ணய சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 70ம்  ஆண்டு  நிறைவடையும்  நாளை நவம்பர்  26ம்  நாள்  நாடாளுமன்ற  மைய மண்டபத்தில்  அரசு கொண்டாடுகிறது. இந்நிகழ்வுக்கு திமுக பொதுக்குழு தனது மகிழ்ச்சியையும்  பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனது முகப்புரையில் இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயகக் குடியரசாகவே கட்டமைத்துள்ளது.

இவற்றோடு, அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட கூறுகளை எப்போதும் திருத்த இயலாது என்று உச்ச நீதிமன்றத்தின் பெரு அமர்வு  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதை மத்திய அரசு மனதில் கொள்ள வேண்டுமென்று திமுக வலியுறுத்துவதோடு, அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்வடிப்படை பண்புகளைச் சிதைத்திட திமுக ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது.

பாஜகவின் வழிகாட்டியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் நோக்கமான மாநிலங்கள், மாவட்டப் பிரிவுகள் அனைத்தையும்  நீக்கி விட்டு இந்தியா முழுவதும் 200 ஜன்பத்கள்  என்று பிரித்து ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்தை நோக்கி பாஜக அரசு இந்த நேரத்தில் பயணிப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

இந்த முறையைக் கொண்டு வர எத்தனிப்பதற்கு  திமுக தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இம்முயற்சியைக் கைவிட வேண்டுமென்று  மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.