மும்பை
சிவசேனா கட்சியின் மத்திய அமைச்சர் சாவந்த் ராஜினாமாவுடன் பாஜகவுடனான உறவு முறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தங்களுக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி தேவை எனக் கேட்டதை பாஜக மறுத்தது. அதைப் போல் பாஜக அளித்த துணை முதல்வர் பதவியை சிவசேனா ஏற்க மறுத்தது. இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு முடிவு ஏற்படாமல் இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை அமைக்க சிவசேனா முயன்றது.
பாஜகவுடன் மத்திய அரசில் பங்கு பெற்றுள்ள சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க அவ்விரு கட்சிகளும் விரும்பவில்லை. அத்துடன் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரவில்லை. அதிக இடங்களை வென்ற கட்சி என்னும் முறையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
சிவசேனா தங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வராததால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக மறுத்து விட்டது. மேலும் அக்கட்சி எதிர்க்கட்சியாக இயங்க தயார் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிவசேனா கட்சியின் மத்திய அமைச்சரான சாவந்த் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் சிவசேனா கட்சி மத்திய அமிசரவையில் இருந்து விலகியது.
இது குறித்து சிவசேனாகட்சிய் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத், “பாஜகவினர் அளித்த வாக்குறுதிகளை அவர்களால் பின்பற்ற முடியவில்லை. எனவே அக்கட்சியுடன் உறவு உள்ளதா என்னும் கேள்விக்கே இடமில்லை. எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவுப்படி சாவந்த் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி உள்ளார். பாஜகவுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு இத்துடன் முறிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.