மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிமைப்பதற்காக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அணுகக்கூடும் என்று பாஜக மூத்த அமைச்சர் ஒருவர் பரபரப்பு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
மழை விட்டும், தூவானம் விடாத கதையாக, வாக்குப்பதிவு, முடிவுகள் அறிவிக்கப்பட்டும், முடிவுபெறாத ஒன்றாக இருக்கிறது மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவி. 288 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 145 எம்எல்ஏக்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம்.
அதற்கும் கூடுதலாக, 161 இடங்களை கைப்பற்றியும் பாஜக, சிவசேனா கூட்டணி இன்னும் ஆட்சியில் அமர முடியவில்லை. சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியை கெட்டியாக பிடித்து கொண்டிருக்கிறது சிவசேனா.
ஆனால், அதை பாஜக ஏற்காததால் சிக்கல் தொடர்கிறது. சிவசேனாவுக்கு ஆதரவு கிடையாது என்று சோனியா காந்தியை சந்தித்த பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந் நிலையில், பாஜக மூத்த அமைச்சர் ஒருவர் மகாராஷ்டிராவில் என்ன நடக்கும் என்பதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: ஆட்சியில் சிவசேனா இணைந்து கொள்ளும் என்று நாங்கள் இன்னும் உறுதியாக நம்புகிறோம்.
ஆனாலும் வாய்ப்புகள் இருக்கிறது. நாங்கள் தேசியவாத காங்கிரசை அணுகலாம். பெரும்பான்மை பலம் இல்லை என்றால் நாங்கள் ஆட்சி அமைக்க முயற்சிக்க மாட்டோம்.
பெரும்பான்மை எண்ணிக்கை இல்லை என்று எங்களுக்கு தெரியும். அதை உணர்ந்து சிவசேனா எங்களை காப்பாற்றும் என்று நம்புகிறோம். 2014ம் ஆண்டு நடந்ததை போல ஆட்சி அமைக்க தேசிய வாத காங்கிரசை அணுகலாம்.
தேர்தல் முடிந்தும், சிவசேனாவை ஆட்சியில் இணைக்க பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. நாங்கள் 105 தொகுதிகளை வென்றிருக்கிறோம். ஆனால் அவர்கள் 56 எம்எல்ஏக்களை தான் வைத்திருக்கின்றனர்.
ஆளுநர் மீது நம்பிக்கை இருக்கிறது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் எங்களை அவர் அழைக்கக்கூடும். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திய பிறகு, ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கூடும் என்றார்.