டெல்லி: கெட்டதை( ஊழலை) ஒழிப்பதற்காக என்று கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்தி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி இருக்கிறது.

நாட்டு மக்கள் அவ்வளவு எளிதாக மறந்தும், கடந்தும் போக முடியாத விஷயம் என்றால் அது பணமதிப்பிழப்பு தான். 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாளில் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.

வாரங்கள் பல ஆகியும் நாட்டின் நிலைமை சீரடையவில்லை. ஏராளமான  பொதுமக்கள் பணமின்றியும், பணத்தை மாற்ற முடியாமலும் திரிந்தனர், மடிந்தனர். தற்போது அந்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது.

அதை நினைவுபடுத்தி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார். தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. ஒவ்வொரு முறையும் அதை பேசி மத்திய அரசு பெருமைப்பட்டு கொள்கிறது. அனைத்துத் தன்னால் தான் என்று கூறியவர்களுக்கு பேரழிவு தான் கிடைத்தது.

கெட்டதை அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, அதற்கு பதிலாக பொருளாதாரத்தை அழித்துவிட்டது. அது ஒரு பேரழிவு என்பதை, நமது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து காண்பித்துவிட்டது. இதற்கு யார் பொறுப்பேற்பது என்று தெரிவித்து இருக்கிறார்.