கொழும்பு:
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாசா களமிறங்கி உள்ளார். அதுபோல, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் சார்பாகமுன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே களமிறக்கப்பட்டு உள்ளார். அத்துடன் மேலும் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மலையக தமிழர்களின் பிரதிநிதித் துவத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு சட்டம், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களின் மீள் குடியேற்றம் போன்றவை கறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒருமைப்பாடான இலங்கையை உருவாக்கும் போது ஒருமித்த இலங்கையை எதற்காகவும் வலுவிழக்க செய்யாது ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்து, நாட்டின் சுயாதீனத்தை, நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பது தனது பொறுப்பு மற்றும் கொள்கை எனவும் சஜித் உறுதி அளித்திருந்தார்.
இதன் காரணமாக சஜித் பிரேமதாசாவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து உள்ளது. ஆர். சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சி, டெலோ, ப்ளாட் ஆகிய இயக்கங்கள் அங்கம் வகித்து வருகிறது.
இதற்கிடையில், சஜித் பிரேமதாசா, இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க சஜித் பிரேமதாச தயாராவதாக பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சே சிங்களர்களிடம் குற்றம் சாட்டி வாக்குச் சேகிரித்து வருகிறார்.