டெல்லி:

யோத்தி நிலம் தொடர்பான வழக்கின் இறுதித்தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம் என அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை,  தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அயோத்தியா வழக்கின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து யாரும் வாய் திறக்கக்கூடாது என்றும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஏற்கனவே  , கடந்த  2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்போது, தேவையற்ற சம்பவங்களளை நினைவுகூர்ந்த நிலையில், தற்போது, மக்களவை உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும்படி தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீர்ப்பு ஆதரவாக இருந்தாலும் எதிராக இருந்தாலும் அதனை கொண்டாடவோ எதிர்க்கவோ வேண்டாம் எனவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்திலும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைதளங்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.அனைத்து வகையான சமுக வலைதளங்கள், வலைதளக்குழுக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உ.பி. உள்பட நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.