வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான கொள்கைகள் காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எச் -1 பி விசா விண்ணப்பங்கள் அதிகளவு ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

இதுதொடர்பாக அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) தரவுகள் அடிப்படையில் இந்த விவரங்கள் தயாரிக்கப்பட்டது.

2015ம் ஆண்டு அமேசான்,மைக்ரோசாப்ட், இன்டெல், கூகுள் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்களின் ரத்து சதவீதம் ஒன்றாக இருந்தது. 2019ம் ஆண்டு அதிகரித்து முறையே 6,8,7 மற்றும் 3 சதவீதமாக உள்ளது.

இதே காலகட்டத்தில் டெக் மகிந்திரா நிறுவனத்தின் சதவீதம் 4ல் இருந்து உயர்ந்து 41 ஆக இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் விசா மறுப்பு சதவீதம் 7ல் இருந்து 53 ஆக உள்ளது.

அக்சென்ஜர், கேப்கிமினி உள்ளிட்ட நிறுவனங்களுக்கான விசா மறுப்பு சதவீதமும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2015 – 2019ம் ஆண்டு காலகட்டத்தில், விசா மறுப்பு சதவீதம் 6ல் இருந்து உயர்ந்து 24 ஆக அதிகரித்து இருக்கிறது. ஆனால், அதுவே, 2010ல் இருந்து 2015 வரை 8 சதவீதத்தை தாண்டவில்லை.

அதாவது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விசா மறுப்பானது மும்மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை கூறி இருப்பதாவது:

அதிபர் டிரம்ப் மேற்கொண்ட கொள்கை முடிவுகளால் விளைந்த நிகழ்வுகளே. இதனால், சிறந்த கல்வியறிவு பெற்ற வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை பார்ப்பது என்பது கடினமான ஒன்றாக மாறியிருக்கிறது என்று கூறியிருக்கிறது.

ஹெச் 1 பி விசா என்பது குடியேறாத முடியாத விசா ஆகும். இந்த விசா அமெரிக்க நிறுவனங்களால் குறிப்பிட்ட தகுதிகளுடன் ஒரு பணியாளர் தேவைப்படும் போது வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், குறிப்பாக இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.