மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
தேர்தலின்போது, கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், சிவசேனாவின் பிடிவாதம் காரணமாக ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று சிவசேனா எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ரவூத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவையான நிலையில், சிவசேனாவின் முதல்வர் பதவி கோரிக்கை காரணமாக, ஆட்சி அமைப்பது தடைபட்டு வருகிறது. சிவசேனாவில் இருந்து முதல்வராக ஒருவர் வருவதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று சஞ்சய் ரவூத் கூறி வருவது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், வரும் 8-ம் தேதியுடன் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் காலம் முடிவடைய உள்ளதால், அதற்குள் புதிய ஆட்சி பதவி ஏற்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து சிவசேனாவின் பிடிவாதம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
அதுபோல தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், பாஜகவுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்தால் மடடுமே ஆதரவு தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறிவிட்ட நிலையில், சிவசேனாவின் கனவும் தகர்ந்துபோனது.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பலகட்ட ஆலோசனைகளும் மேற்கொண்டார். சிவசேனாவுக்கு உறுதியான பதில் தெரிவிக்காமல், மகாராஷ்டிரா மக்கள் தங்களுக்கு எதிர்க்கட்சியாக இருக்கவே வாக்களித்துள்ளார்கள் என்று சரத்பவார் கூறி வருகிறார்.
இநத் பரபரப்பான சூழ்நிலையில், இன்று காலை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத், சரத்பவாரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சந்திப்பு முடித்து வெளியே வந்த சஞ்சய் ரவூத்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, ஆட்சி அமைப்பது தொடர்பாக கேள்விக்கனைகளை வீடிசர். ஆனால், அவர், இது “மரியாதை நிமித்தமாக சரத்பவாரைச் சந்தித்தேன் வேறு ஏதும் இல்லை” என்று கைவிரித்து விட்டு சென்றுவிட்டார்.
இதன் காரணமாக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. புதிய அமைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சி அமையுமாஅல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.