மும்பை

பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் உடன் சிவசேனா கட்சியின் 25 உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளதால் அக்கட்சி உடையும் என சுயேச்சை உறுப்பினர் ரவி ராணா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கட்சி கூட்டணி வெற்றி பெற்றும் அரசு அமைக்காத நிலை உள்ளது.   சிவசேனாவின் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி கோரும் நிபந்தனைக்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.   அதற்கு பதிலாக பாஜக அளிக்கும் துணை முதல்வர் பதவியை சிவசேனா ஏற்றுக் கொள்ளவில்லை.  இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமராவதி மாவட்டத்தில் உள்ள பட்நேரா சட்டப்பேரவை தொகுதியின் சுயேச்சை உறுப்பினர் ரவி ராணா பாஜகவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.   அவர் செய்தியாளர்களிடம், “பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிவசேனா கட்சிக்கு 56 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.  அக்கட்சி தனியாக போட்டியிட்டால் 25 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது.

அரசு அமைக்கத் தேவையான தொகுதிகளைக் கூட்டணிக்கு வாக்காள்ர்கள் அளித்துள்ளனர்.  ஆனால்  சிவசேனா அரசு அமைப்பதற்கு இடைஞ்சல் அளித்து வருகிறது.  இது மக்களை அவமானப்படுத்தும் செயலாகும்.    சிவசேனா தலைவர் சஞ்ச்ய் ரவுத் ஒரு கிளிப்பிள்ளை போன்றவர்.   அவர் உத்தவ் தாக்கரே கூறியதை அப்படியே சொல்வார்.  அதற்கு பதில் உத்தவ் தாக்கரே நேரடியாக பாஜகவுடன் பேசி ஒற்றுமையாக இருக்கலாம்.

அவ்வாறு ஒற்றுமையாக போகாவிடில் சிவசேனா கட்சி விரைவில் உடைந்து விடும். ஏற்கனவே 25 சிவசேனா உறுப்பினர்கள் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.   அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளனர்.   தேவேந்திர பட்நாவிஸ் முதல்வரான 2 அல்லது 3 மாதத்தில் மேலும் 20-25 சிவசேனா உறுப்பினர்கள் பாஜக பக்கம் சாய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.