
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாம் பெயரில் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுவரும் விருதின் பெயரை, மறைந்த தனது தந்தை ஒய்எஸ்ஆர் பெயரில் வழங்குவதற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்த முடிவு எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதி, மவுலானா அபுல்காலம் ஆசாத் பெயரில், ஆந்திர மாநிலத்தில் 10ம் வகுப்பில் முதலிடம் பெறக்கூடியவர்களுக்கு, ‘ஏபிஜே அப்துல்கலாம் பிரதிபா புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டு வந்தது. இந்த விருதுடன் சேர்த்து கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த விருது ‘ஒய்எஸ்ஆர் வித்யா புரஸ்கார்’ என்ற பெயரில் இனிமேல் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதோடு, எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவும் தனது எதிர்ப்பை பதிவுசெய்தார். இதற்கு பாரதீய ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனையடுத்து, மாநில அரசின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. விருதுகள், காந்தியடிகள், அம்பேத்கர் மற்றும் கலாம் பெயரில்தான் வழங்கப்பட வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]