அதிமுக ஒன்றும் மன்னார்குடி மாஃபியாக்கள் திறந்து வைத்த லாலா கடை இல்லை, ஆங்காங்கே கிளைகளை திறப்பதற்கு என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
திமுக உட்ப எதிர்கட்சிகளோடு, சசிகலா குடும்பத்தினரையும் தொடர்ந்து அதிமுகவின் நமது அம்மா நாளேடு மூலம், அக்கட்சி விமர்சித்து வருகிறது. இடைத்தேர்தல் காலத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தும், பாமகவுக்கு ஆதரவாகவும் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்ட அக்கட்சியின் நாளேடு, தற்போது மீண்டும் சசிகலாவின் குடும்பத்தினரை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த நாளிதழின் ஆசிரியரான மருது அழகுராஜ், தனது புனைப் பெயரான சித்ரகுப்தன் பெயரில் எழுதியுள்ள கட்டுரையில், “அதிமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. ஆல மரம். எத்தனை புயல் வந்தாலும் இந்த ஆல மரம் தாங்கும். 1.5 கோடி தொண்டர்களின் ரத்தத்தில் உருவானது. மீண்டும் தங்களது ரத்தத்தை உறிஞ்சுவதற்கு, சிறையில் தற்போது இருப்பவர்களையும், சிறையில் இருந்து வெளியே வந்தவர்களையும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஜெயிலிலும், பெயிலிலும் காலத்தை கழிக்கும் கரையான்களால் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுக ஒன்றும் லாலா கடை அல்ல. தினகரன் அல்ல திகார்கரன். பூத் ஏஜென்ட் ஆகக் கூட நியமிக்க தகுதி இல்லாதவர்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தினகரனை சசிகலா ஒதுக்க தொடங்கிவிட்டதாகவும், அவர் சிறையிலிருந்து வெளிவந்ததும் அதிமுகவுக்கு ஆதரவு தருவார் என்றும் தினகரன் தரப்பு அதிருப்தியாளரான பெங்களூர் புகழேந்தி கருத்து தெரிவித்திருந்தார். அத்தோடு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், சசிகலா தரப்பு தூதராகவும் சந்தித்து பேசியிருந்தார். பல்வேறு அமைச்சர்களும் சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்க மறுத்து வருவதோடு, தினகரனை மட்டுமே விமர்சித்தும் வருகின்றனர்.
இத்தகைய சூழலில் நமது அம்மாவில் வெளியாகியுள்ள இந்த கட்டுரை அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.