பெங்களூரு: 2018ம் ஆண்டில் கர்நாடகாவில் அதிகம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரிய வந்திருக்கிறது.
அதாவது 2018ம் ஆண்டில் 6.2 சதவீதம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருக்கிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த எண்ணிக்கையைவிட அதிகமாகும். 80 சதவீதம் அளவுக்கு தரமான மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளபோது, இது மிகவும் கவலைப்படவேண்டிய விஷயம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
கர்நாடகாவுக்கு அடுத்து குஜராத்(2%), புதுச்சேரி(5.5%), திரிபுரா(5.2%) ஆகிய மாநிலங்கள் அடுத்ததடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. காசநோய் உள்ளவர்களில் 10.3 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் இருக்கிறது.
அவர்களில் 70 சதவீதம் பேருக்கு தங்களுக்கு எய்ட்ஸ் இருப்பதை அறிந்தே வைத்திருக்கின்றனர். இதுதான் கர்நாடகாவில் காசநோயாளிகள் அதிகம் பேர் இருக்க காரணம் என்கிறார் கர்நாடக காசநோய் பிரிவின் மாநில இணை இயக்குநர் சீனப்பா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: 16,000 பேரில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேருக்கு எய்ட்சுடன், காசநோயும் இருக்கிறது. கல்புர்கி, யாட்கிர், பாகல்கோட், பெலகாவி ஆகிய பகுதியல் இது மிகவும் அதிகம். 25 சதவீத எய்ட்ஸ் நோயாளிகள் காசநோயால் தான் இறந்து போகின்றனர்.
அதிகளவு இறப்பு விகிதம் இருப்பதால் மருத்துவ ரீதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது சுகாதார அமைச்சகம். எய்ட்ஸ், காசநோயாளிகளுக்கு அளிக்கப்படும் கூட்டு மருந்து அளிக்கும் மையங்களை ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, ஒரு லட்சம் பேருக்கு தினசரி மருந்துகளும், ஹெச்ஐவி பாதிப்புடன் இருக்கும் 5 லட்சம் பேருக்கு காசநோய் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக காசநோய் என்பது எளிதில் கண்டறியக்கூடிய நோயாகும். 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய காசநோய் அறிக்கையின் படி, 83,094 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் 17.38 சதவீதம் பேர் தனியாரின் மூலம் கண்டறியப்பட்டனர். 2018ம் ஆண்டுதான் மற்ற ஆண்டுகளை காட்டிலும், 2.34 சதவீதம் காசநோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்றார்.