டில்லி
முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் இந்தியப் பொருளாதாரம் குறித்து டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் மீது ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு விதிகளை மீறி வெளிநாட்டு முதலீடு பெறச் சலுகை அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது டிவிட்டரில் தனது குடும்பத்தினர் மூலமாகப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்தியப் பொருளாதார நிலை குறித்துப் பல கருத்துக்களை அவர் டிவிட்டரில் பதிந்து வருகிறார். சமீபத்தில் அவர் அவ்வாறு பதிவுகளை வெளியிட்டது பரப்ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் தனது டிவிட்டரில், “தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் அக்டோபர் 26 ஆம் தேதிய இதழைப் படியுங்கள். அதை எதிர்காலத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள 500 நிறுவன அதிபர்கள் படித்துள்ளனர். அந்த பத்திரிகையின் தலையங்கத்தில் இந்தியப் பொருளாதாரம் அரைகுறையாக நிர்வகிக்கப்படுவதால் மோசமாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது” எனப் பதிந்துள்ளார்.
மற்றொரு பதிவில் சிதம்பரம் “சென்ற வாரம் இந்தியப் பொருளாதாரம் மோசமாக உள்ளது என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு நமது வர்த்தகம் மற்றும் தொழிலக அமைச்சர் பியூஷ் கோயல் அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்” என பதிந்துள்ளார்.