பெங்களூரு: குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா என்பது, பாஜக தலைவர் அமித் ஷா மேற்பார்வையில் செய்யப்பட்டு ஏற்பாடுகளாகும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பேசும் வீடியோ பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
கர்நாடகாவில், காங்கிரஸ்,மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு எதிராக கூட்டணி எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கினர். அதன் விளைவாக, குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
அதன்பின், எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், பாஜக நிர்வாகிகளிடம் எடியூரப்பா பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது, மொத்தம் 7 நிமிடங்கள் அந்த வீடியோ ஓடுகிறது. அந்த வீடியோவில், எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை எடியூரப்பா பேசுவது போன்று இருக்கிறது. அதாவது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு எதிராக பாஜக துணை முதலமைச்சர் லட்சுமண்சவதி பேசியதற்கு வருத்தப்பட்டு பேசியிருக்கிறார் எடியூரப்பா.
அவர் பேசியிருப்பதாவது: ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் மும்பையில் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டது, அமித்ஷாவுக்கு தெரிந்தே நடந்தது.
அவர்களால் தான் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்திருக்கிறது. நம்மால் தான், அவர்கள் இரண்டரை மாதங்கள் தொகுதியை விட்டு, குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தனர். எனவே, அவர்களுக்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டும் என்று பேசியிருப்பது போன்று அந்த வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோவை எடியூரப்பா மறுக்கவில்லை என்பதோடு, கட்சியின் நலனுக்காகவே பாஜகவினரோடு அவ்வாறு பேசியதாக கூறியிருக்கிறார். இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்ததாவது:
அவரும் (எடியூரப்பா), அமித் ஷாவும் ஜனநாயகத்தை படுகொலை செய்து இருக்கின்றனர் என்பது இதன்மூலம் தெரிகிறது. அவர்கள் இருவரும் இனி பதவிகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்றார்.
அதிகாரத்தையும், பணத்தையும் தவறாக பயன்படுத்தி இருப்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இனி மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறியிருக்கிறார்.