டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிப்பை அடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை 2 ஆக பிரித்து, ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ஆணையிட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அதிகார பூர்வ அரசியல் வரைபடத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. புதியதாக பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில், லே மாவட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மற்ற பகுதிகள் அனைத்தும், மற்றொரு யூனியன் பிரதேசமான ஜம்முகாஷ்மீரில் இணைக்கப் பட்டுள்ளன. புதிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவின் மொத்த மாநிலங்கள் 28, யூனியன் பிரதேசங்கள் 9 ஆகும்.
தற்போது, அந்தமான் மற்றும் நிக்கோபார், சண்டிகார், டாமன் மற்றும் டையூ, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக், லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களாகும்.
அதே போன்று, மாநிலங்களில் வரிசையில், ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, இமாலச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் வரைபடத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
இவைதவிர, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா,திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் வரைபடத்தில் உள்ளன.