டெல்லி: நிலவின் தென்துருவ பகுதியில் நிச்சயம் விக்ரம் லேண்டரை தரையிறக்குவோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.
ஜூலை 22ம் தேதி, நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோவானது, சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன் பின்னர், நிலவை சுற்றி ஆராய்ச்சி செய்ய, ஆர்பிட்டர் பகுதியானது, விண்கலத்தில் இருந்து பிரித்து அனுப்பப்பட்டது.
கடந்த 7ம் தேதி பிரித்து விடப்பட்ட விக்ரம் லேண்டர், பாதுகாப்பாக சந்திரனில் இறங்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது. அதனால் விஞ்ஞானிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுமே அதிர்ச்சி அடைந்தது.
இந் நிலையில், நிலவில் பாதுகாப்பாக விக்ரம் லேண்டரை இறக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
டெல்லி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட அவர் கூறியதாவது: சந்திரயான் 2 திட்டம், மெதுவாக தரையிறங்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தால், சாதிக்க முடியவில்லை.
ஆனால் இந்தத் திட்டத்தின் மற்ற அளவுகோல்கள் வெற்றியடைந்து விட்டன. எனவே மீண்டும் ஒரு முறை மெதுவாக தரையிரங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அது குறித்த திட்டத்தில் பணியாற்றி வருகிறோம் என்றார்.